ஆல் பாஸ் எனும் ஆபத்து
உலகம் தன்னை உணர்ந்து கொண்டிருக்கும் நேரம். கொரோனா பாதிப்பால் உலகமே தட்டுத்தடுமாறி இயங்கிக் கொண்டு இருக்கின்றது. உலகப் பொருளாதாரமும் முடங்கி மெல்ல மெல்ல இப்பொழுதுதான் துளிர்விட துவங்கி இருக்கின்றது. மக்களும் பயத்தில் மூழ்கி இப்பொழுதுதான் இப்பொழுதுதான் அதிலிருந்து விடுபட துவங்கி இருக்கின்றனர்.
பல நாடுகளில் கொரானாவின் பாதிப்பு குறையாமல் இருக்கும் நிலையில் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் சமூகத்தின் பலநிலைகளில் இருந்து வரும் மாணவர்கள் ஒன்று கூடும் இடம் என்பதால் கொரோனா பரப்பும் மையமாக இருந்து விடக்கூடாது என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் பொது முடக்கம் நீடிக்கின்றது. அதனால் மாணவர்கள் பல மாதங்களாக வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மாணவர்களுக்கு தேர்வு வைத்து அவர்களை அடுத்த நிலைக்கு தேர்ச்சிபெற வைப்பது சிரமமான காரியமாக இருப்பது உண்மையே. இருந்தபோதும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அரசு அறிவித்திருப்பது சமூகத்தில் மாபெரும் பாதிப்புகளை கண்டிப்பாக ஏற்படுத்தும். நாட்டின் முன்னேற்றத்திற்கும் தடைக்கற்களாக இது அமையும். அதிகமான இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா விளங்கும் என்ற நிலையில். அவர்கள் தேர்ந்தெடுத்து படித்த பாடங்களில் போதிய கற்றல் அடைவு பெறவில்லை என்றால் அவர்களால் இந்த நாட்டிற்கு எந்தவித முன்னேற்றத்தையும், மாற்றத்தையும் செய்ய இயலாது. மதிப்பெண் பட்டியலில் மட்டும் தேர்ச்சி என்று வைத்துக்கொண்டு தங்களது சொந்த வாழ்வில் தோல்வியை தழுவ நேரிடும்.
மாணவர்களை சிறுசிறு குழுக்களாகப் பிரித்து அவர்களுக்கு பல கட்டங்களில் தேர்வை நடத்தி இருக்கலாம். கல்லூரி பருவத் தேர்வுகளை அடுத்து வரும் பருவத்தேர்வு களுடன் இணைத்து நடத்தியிருக்கலாம். இந்த மாதிரியான முறைகளை கைவிட்டு அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்து இருப்பதன் மூலம். அதிக கற்றல் அடைவு பெற்ற மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது அவர்களின் எதிர்கால வாழ்வை நிச்சயமாக பாதிக்கும். கற்றல் அடைவு இல்லாத மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இது கண்டிப்பாக நாட்டை பாதிக்கும்.
அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் நலனிலும் நாட்டின் நலனிலும் அக்கறை இல்லாதவர்களின் செயலாகவே இது அமைகின்றது. அரியர் வைத்துள்ள மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர் என்று அறிவித்துள்ளது. மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் குறிப்பாக தொழில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இவ்வாறு அறிவித்திருப்பது முற்றிலும் தவறான முடிவாகும். பல வருடங்களாக தேர்ச்சி பெற இயலாத மாணவர்கள் இதன் மூலம் தேர்ச்சி பெற்றுவிட்டனர்.அவர்களுக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பதும் தவறாகும். அதில் நன்றாக படிக்கும் மாணவர்களும் இருக்கக்கூடும். தேர்வு நடந்து இருந்தால் அவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்றிருக்க முடியும். அவர்களுக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் வழங்குவது எந்த வகையில் நியாயம்?.
எனவே தேர்வு முறையை சீரமைக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என்பதை அரசியல்வாதிகளும், ஆளும் தரப்பினரும், கல்வியாளர்களும் உணர வேண்டும்.
- முத்துப்பாண்டி பரமசிவம் .
Comments
Post a Comment