கருத்தரங்கில் கண்டதும் கேட்டதும்.


கருத்தரங்கில் கண்டதும் கேட்டதும்.

தமிழ் இலக்கியங்களில் பண்பாடு குறித்த பதிவுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 25.01.2020 அன்று திண்டுக்கல் ஜி.டி.என் கலைக்கல்லூரியின் தமிழ்த் துறையின் சார்பாக நடைபெற்றது. இதில் பங்கு பெற்று தமிழறிவு பருகும் வாய்ப்பினைப் பெற்றேன்.
                                                   
கருத்தரங்கு முகப்பு

          இக்கருத்தரங்கில் இலங்கை மலேசியா கனடா போன்ற நாடுகளிலிருந்து தமிழ் அறிஞர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர் .

   சிறப்புரை வழங்கிய மலேசியா பன்னாட்டுத் தமிழ் கல்வியாளர் பேரவையின் செயலாளர் குணநாதன் ஆறுமுகம் அவர்கள் தொடக்க காலத்தில் மலேசியாவின் கட்டமைப்பில் தமிழர்களின் பங்கு முக்கியமானது. தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த தமிழர்தான் கொடிகட்டிப் பறந்தனர். பின் வருகை புரிந்த சீனர்களின் ஆதிக்கம் மலேசியாவில் அதிகரித்தது. இதன் காரணமாக தமிழர்களின் வாழ்வில் சிறு மாற்றம் ஏற்பட்டது. தமிழரிடையே புழக்கத்தில் இருந்த தமிழ் மொழி சிறுக சிறுக குன்ற ஆரம்பித்தது. தமிழ் மொழியினை வளர்க்கும் விதமாக ஆறு இதழ்கள் வெளிவந்தன.ஆனால் இன்று மூன்று இதழ்களாக சுருங்கிவிட்டன . இருந்தபோதும் தமிழரின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் கோவில்களை அதிக அளவில் மலேசியாவில் தமிழ் மக்கள் நிறுவியுள்ளனர். பலர் தங்களின் இல்லங்களிலேயே தாங்கள் விரும்பிய தெய்வங்களுக்கு கோவில் அமைத்துள்ளனர். ஒரு இடத்தில் கையெடுத்து வணங்கினோம் என்றால் கையை எடுக்க வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு கோவில்கள் எங்கும் நிரம்பி இருக்கின்றன. தொடக்கத்தில் பல தமிழர்கள் விழிப்புணர்வு இல்லாமல் தாங்கள் சேர்த்து பாதுகாத்து வைத்திருந்த நிலங்களை பறிகொடுத்து விட்டனர். சுதாரித்துக்கொண்ட அவர்கள் இன்று கொடிகட்டி வாழ்கின்றனர் என்று தனது கருத்தினை பதிவு செய்தார்.

             அடுத்ததாக இலங்கையிலிருந்து வருகை புரிந்திருந்த இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்தை துறை கலை கலாச்சார பீடத்தின் தலைவர் டாக்டர் எஸ். கேசவன் தனது சிறப்புரையில் ஆன்மீகம், பக்தி இரண்டும் தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் மிகுந்த தொர்பை ஏற்படுத்தி இருக்கின்றது. சங்க காலப் புலவர்கள் பலர் இலங்கையைச் சேர்ந்தவர்களே. விஜயன் வருவதற்கு முன்புவரை இலங்கை முழுவதும் தமிழர் தேசமாகத்தான் இருந்தது. பின் தான் சிங்களம் காலூன்ற தொடங்கி தமிழர் இரண்டாம் தர மக்களாக மாறினர். தமிழகத்தில் ராவணன் பற்றி தவறான சித்தரிப்பு இருக்கின்றது. ராவணன் சைவன் ராவணனை இறைவனாக நாங்கள் வழிபடுகின்றோம். எங்களுக்கு அடையாளமே ராவணன்தான். தற்போது இலங்கை மண்ணில் அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றது. புத்தரின் மறுபிறப்பு தான் ராவணன் என்ற கோட்பாட்டினை அடி ஏற்றி உண்மைகள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இலங்கையில் மட்டக்களப்பு பகுதியில் இராவணனுக்கு சிலைகள் வைத்து வழிபாடுகள் நடத்துகின்றோம். நாங்கள் ராவணனின் வழித்தோன்றல்கள் என பெருமையாக பேசுவோம். நீங்கள் அனைவரும் இலங்கைக்கு வரவேண்டும். அங்கு பார்ப்பதற்கு எண்ணற்ற இயற்கை காட்சிகள் வரலாற்றுச்சின்னங்கள் இருக்கின்றன. குறிப்பாக அசோக வனம் உள்ளது. மட்டக்களப்பில் பெரும் தெய்வமாக கண்ணகி அம்மன் என்ற பெயரில் சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவியை சக்திக்கு நிகராக மிகப்பெரிய அளவில் வழிபாடுகள் நடைபெறுகின்றது. மூன்று மாதத்திற்கு முன்பு தான் அவ்வைக்கு சிலை வைத்தோம். சோழ இளவரசர்கள் வந்து சென்றதற்கு காட்சியாக பல கோயில்களை கட்டி உள்ளனர். எங்கள் இலங்கை நாடு மொத்தமே 300 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் தான் அமைந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்டு இப்பொழுதுதான் சிறிது சிறிதாக மீண்டு வருகின்றோம் . எண்ணிக்கையின் அடிப்படையில் தமிழர்கள் குறைந்துவிட்டனர். எனவே அதிக அளவு குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஊக்குவிப்புகள் செய்து கொண்டிருக்கின்றோம். பல அமைப்புகளும் இதனை வலியுறுத்தி பிரச்சாரம் செய்கின்றன. இலங்கையில் இசை நடனம் போன்ற பண்பாட்டின் கூறுகளை தொடக்க வகுப்புகளில் இருந்தே பாடமாகவே கற்பிக்கப்படுகின்றன. எனவே எங்களின் வாழ்வில் கலாச்சாரமும் பண்பாடும் பின்னிப்பிணைந்த ஒன்றாகவே வாழ்நாள் முழுவதும் இருக்கும். இவ்வாறான கல்வி போதித்தல் தமிழ்நாட்டில் இல்லை எனவே பண்பாடு கலாச்சாரத்தில் இங்கு மாற்றம் காணப்படுகிறது என்று தனது உரையில் குறிப்பிட்டார்.

           கனடா நாட்டிலிருந்து வருகை புரிந்திருந்த, கனடா நாட்டின் பன்னாட்டுத் தமிழ் கல்வியாளர் பேரவையைச் சார்ந்த டாக்டர் எஸ். சந்திரசேகர் தமிழ்மொழியின் மீது இருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக இங்கே வந்துள்ளேன்.எங்கள் எனது பரம்பரைக்கு பூர்வீகம் திருச்சி சாத்தனூர். எனது மூதாதையர்கள் இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக சென்றிருந்தனர் அங்கிருந்து புலம் பெயர்ந்து கனடாவிற்கு சென்று விட்டோம். க.கைலாசபதி போன்ற புகழ்பெற்ற பேராசிரியர்களிடம் தமிழ் கற்றேன். எனது படிப்பிற்கு என் தந்தை மிகவும் உறுதுணையாக இருந்தார். எனக்கு மிகவும் பிடித்த தொழில் ஆசிரியர் தொழில். மற்ற தொழில்களில் பலன்கள் உடனடியாக கிடைக்கும். ஆனால் ஆசிரியர் தொழிலில் முடிவுகள் கிடைக்க பல வருடங்கள் ஆகும். ஆசிரியரிடம் படித்த மாணவன் சிறந்த மனிதனாக மாறும்போதுதான் பலன் கிடைக்கும் அதுவரை காத்திருக்கவேண்டும். உலகத்திலேயே தமிழர்கள் வாழும் நாடுகளில் நான்காவது இடத்தை கனடா பெற்றிருக்கின்றது. கனடா பனிபொழியும் நாடு என்பதால் இயல்பாக ஜீன்ஸ் போன்ற உடைகளை உடுத்துவோம். தமிழ் நிகழ்ச்சி என்றால் வேட்டி சட்டை பாவாடை தாவணி என்று அனைவரும் மாறிவிடுவோம் .இது எங்களுக்கு உரிய தனித்துவ அடையாளமாகவே செய்து வருகின்றோம். .ஜனவரி மாதத்தை தமிழ்மரபு மாதம் என்று கனடா பாராளுமன்றத்தில் சட்டம் ஏற்றப்பட்டு உள்ளது. எனவே மாதம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டி இருக்கும். இதில் தமிழ் பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றிற்கு பஞ்சமே இருக்காது. எங்கள் நாட்டின் பிரதமர்வேட்டி சட்டை அணிந்து பொங்கல் விழாவில் கலந்து கொள்வார். ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் தமிழர் தெரு விழா என்ற பெயரில் ஒரு தெரு முழுவதுமாக தமிழரின் கலாச்சார பண்பாட்டுப் பொருள்கள் காட்சிப்படுத்தப்படும். இது உலக நாடுகளில் தமிழர்களுக்கு கிடைத்த அங்கீகாரமாகும். வெளிநாடுகளில் தமிழ் அழியவில்லை வளர்கின்றது வளர்கிறது என்பதற்கு இதுவே சாட்சி என்று தனது கருத்துக்களை பதிவு செய்தார்.
உலகத்  தமிழ் அறிஞர்கள்

Comments

Popular posts from this blog

சிலப்பதிகாரம் – அடைக்கலக் காதை

பண்டைய இலக்கியம் - பாடக் குறிப்புகள்

தொப்பை வருவதற்குக் காரணம் தெரியுமா..?